கோலாலம்பூர், அக்டோபர்-24 – 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு மீண்டும் 100 மில்லியன் ரிங்கிட் நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து, பக்காத்தான் ஹாராப்பானைச் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை உயர்த்தும் முயற்சிகளை முன்னெடுக்க அத்தொகை போதுமானதாக இல்லையென, மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் தலைவருமான அவர் மக்களவையில் பட்ஜெட் விவாதத்தின் போது கூறினார்.
100 மில்லியன் ரிங்கிட் நிதியை அரசாங்கம் உச்சவரம்பு ஒதுக்கீடாக முடிவு செய்யக்கூடாது; மாறாக, உதவித் தேவைப்படும் சமுதாயத்தில் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஒரு தொடக்கமாகக் கருத வேண்டுமென பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
மித்ராவுக்கு ஒதுக்கப்படும் நிதியில் கடந்த எட்டாண்டுகளில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றார் அவர்.
இந்தியச் சமூகத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அரசாங்கம் ஏன் முன்னுரிமை கொடுப்பதில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
தமிழ்ப்பள்ளிகளில் போதுமான பாலர் வகுப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், தனியார் பாலர் வகுப்புகளுக்குச் செல்லும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும் மாணவர்களுக்கும் மித்ராவே மானியம் வழங்குகிறது.
அதற்காகவே ஆண்டு தோறும் 10 மில்லியன் ரிங்கிட் நிதியை தனியாக ஒதுக்கி வைக்க வேண்டியிருப்பதை பிரபாகரன் சுட்டிக் காட்டினார்.
பார்க்கப் போனால் இது கல்வியமைச்சின் பொறுப்பாகும் என்றார் அவர்.
நாட்டிலுள்ள 528 தமிழ்ப்பள்ளிகளில் 271 பள்ளிகள் மட்டுமே பாலர் வகுப்பு வசதிகளைக் கொண்டுள்ளன.
அவற்றில் 65 விழுக்காட்டுப் பள்ளிகளில் பாலர் வகுப்புக்கென ஒரு வகுப்பறை மட்டுமே இருப்பதால், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் ஆரம்பக் கல்வி வாய்ப்பை நாம் கட்டுப்படுத்தி விடுகிறோம் என பிரபாகரன் ஏமாற்றத்துடன் சொன்னார்.