
கோலாலம்பூர், அக்டோபர்-27, நாட்டில் சிறந்து விளங்கும் 50 குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சிறப்பிக்கும் வகையில் 24-வது ஆண்டாக E50 Enterprise விருதளிப்பு நேற்றிரவு விமரிசையாக நடைபெற்றது.
SME Corp மற்றும் Deloitte Malaysia இணை ஏற்பாட்டில், தொழில்முனைவோர்-கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சின் ஒத்துழைப்போடு விருது விழா நடைபெற்றது
அதில் 50 நிறுவனங்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன; அவற்றில் முதல் 10 விருதுகள் முதன்மை விருதுகளாகும்.
E50 சிறந்த பெண் தொழில்முனைவர் விருது, E50 சிறந்த ஏற்றுமதியாளர் விருது, E50 சிறந்த ESG நடைமுறை அதாவது சுற்றுச் சூழல், சமூகம், நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் நிறுவனம் என கூடுதலாக 3 சிறப்பு விருதுகளும் இம்முறை வழங்கப்பட்டன.
விருது பெற்ற பெருவாரியான நிறுவனங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் சேவைத் துறையில் ஈடுபட்டு வருவதோடு, SCORE திட்டத்தின் கீழ் 4 நட்சத்திர தர அந்தஸ்து பெற்றவையாகும்.
இவ்வாண்டு சிறப்பம்சமாக E50 விருது பெறும் நிறுவனங்களில் 32 விழுக்காடு அல்லது16 நிறுவனங்கள் பெண்களுக்குச் சொந்தமானதாகும்.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஈவோன் பெனடிக், துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், SME Corp தலைவர் தான் ஸ்ரீ பெர்னட் டோம்போக் உள்ளிட்ட பிரமுகர்கள் அதில் கலந்து சிறப்பித்தனர்.