
பெய்ஜிங், நவம்பர்-9, வறண்டு போன சிவப்புப் பாலைவனமாக தற்போது காட்சியளிக்கும் செவ்வாய் கிரகத்தில், சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் பெருங்கடல் இருந்திருக்கலாமென சீன அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
370 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த பெருங்கடல் உருவாகியிருக்கலாம்.
சீனாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட Zhurong rover எனப்படும் ஆய்வு வாகனம் அங்கிருந்து அனுப்பியுள்ள தகவல்கள் மற்றும் முப்பரிமாணப் படங்கள் அடிப்படையில் விஞ்ஞானிகள் அவ்வாறு கூறியுள்ளனர்.
2021-ஆம் ஆண்டில் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய Zhurong ஆய்வு வாகனம், அங்குள்ள நில அமைப்பு, நீர்-பனிக்கட்டிகள் இருப்பற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் தெற்கு யுத்தோப்பியா பிராந்தியத்தில் உள்ள கடற்கரையானது, செவ்வாய் கிரகத்தின் ஆரம்ப கால வரலாற்றில் குறுகிய காலத்திற்கு இருந்திருக்கக் கூடிய கடலின் எச்சமே என ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர்.
பசுமைமிக்க உயிரோட்டமுள்ள பிரதேசமாக செவ்வாய் இருந்திருக்கக்கூடும் என்பதை, அதன் மேற்பரப்பில் காணப்படும் படிமங்கள் உறுதிச் செய்கின்றன.
செவ்வாய் கிரகத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே நீர் நிலைகள் இருந்திருக்கலாமென நீண்ட காலமாகவே விஞ்ஞானிகள் நம்பி வரும் நிலையில், சீனாவின் இப்புதிய கண்டுபிடிப்பு அதன் தொடர்பான அறிவியலாராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்தும் என நம்பலாம்.