புக்கிட் மெர்தாஜாம், நவம்பர்-13 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், ஜாலான் புக்கிட் தெங்காவில் டிரேய்லர் லாரியிலிருந்த சரக்கு கொள்கலன் சரிந்து வாகனங்கள் மீது விழுந்ததில், ஓர் இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை 9.16 மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தில், வேலைக்குக் காரில் சென்றுகொண்டிருந்த 21 வயது Lee Zi Rou என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.
நசுங்கியக் காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவரின் உடலை, தீயணைப்பு-மீட்புப் படையினர் சிறப்புக் கருவிகளின் உதவியுடன் வெளியே மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.
அவ்விபத்தில் 3 கார்கள், 1 டிரேய்லர் உட்பட 2 லாரிகள் என மொத்தமாக 5 வாகனங்கள் சம்பந்தப்பட்டன.
மற்றொரு காரினுள் சிக்கிக் கொண்ட 25 வயது ஆடவரை, தீயணைப்பு-மீட்புக் குழு வருவதற்கு முன்பாக பொது மக்களே காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையில் விழுந்த கொள்கலன், 2 கிரேன்களின் மூலம் அகற்றப்பட்டது.
டிரேய்லர் ஓட்டுநர் அதனை வளைக்க முயன்ற போது, கொள்கலன் சரிந்து சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்றிருந்த சில வாகனங்கள் மேல் விழுந்த வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.