ஜோகூர் பாரு, நவம்பர்-17 – ஜோகூர் பாரு, பண்டார் பாரு ஊடாவில் பெரியக் கால்வாய் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன சிறுவன், இறந்துகிடக்க கண்டெடுக்கப்பட்டான்.
காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 4 மீட்டர் தொலைவில் 10 வயது அச்சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மீட்புப் பணியின் இரண்டாவது நாளான நேற்று மாலை 5 மணியளவில் சடலம் மீட்கப்பட்டதாக தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் வாக்கில் மழையின் போது இரு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுவன் கால் இடறி கால்வாயில் விழுந்ததாகக் கூறப்பட்டது.
சுமார் 4 மீட்டர் ஆழமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாயில், சம்பவத்தின் போது நீர் மட்டம் 2.43 உயரத்திற்கு இருந்துள்ளது.
இந்நிலையில், இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க மழைக்காலத்தில் பிள்ளைகளின் நடமாட்டத்தை அணுக்கமாகக் கண்காணிக்குமாறு பெற்றோர்களைப் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.