கோலாலம்பூர், நவ 18 – சிலாங்கூர் Kuan-கில் இம்மாதம் 14 ஆம் தேதி 10 வயது சிறுமி சைக்கிள் ஓட்டிச் சென்றபோது வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பியோடியதில் அச்சிறுமி மூளை செயல் இழப்புக்கு உள்ளாகியுள்ளார். அந்த சிறுமியை மோதிவிட்டு தப்பியோடிய வாகன ஓட்டுனரை கண்டுப்பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை குடும்பத்தினர் நாடியுள்ளனர். மூளையில் கடுமையாக காயம் அடைந்ததால் அதன் பாதிப்புக்கு உள்ளான அந்த சிறுமி உயிர் பிழைப்பதற்காக மருத்துவ கருவியின் உதவியை நம்பியுள்ளார்.
குவாங் தொடக்கப் பள்ளிக்கு அருகே நிகழ்ந்த அந்த விபத்து குறித்து தகவலை அறிந்த பொதுமக்கள் பொறுப்பற்ற வாகன ஓட்டுனரை கண்டுப்பிடிப்பதற்கான தகவல்களை வழங்கும்படி குவாங் சீன தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது. வேகமாக சென்ற கார் ஒன்று அந்த சிறுமியை மோதியபின் அங்கிருந்து நிற்காமல் தப்பிச் சென்றதாக அச்சிறுமியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அச்சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.