பேராக், நவம்பர்-18 – சுமார் 30 யானைகள் சாலையின் நடுவே படுத்துறங்கியதாலும், விளையாடியதாலும், கிளந்தான், கோத்தா பாருவிலிருந்து கெடா, அலோர் ஸ்டாருக்கான லாரி ஓட்டுநரின் பயணம் 2 மணி நேரம் தாமதமடைந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
Mohd Hisham Yazid எனும் 38 வயது ஆடவர் தனது டிக் டோக்கில் அந்த ருசிகர சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை 3 மணிக்கு பேராக், தாசேக் பாண்டேங்கில் (Tasik Banding) அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லாரி ஓட்டுநராக அச்சாலையை வாடிக்கையாகப் பயன்படுத்தும் தமக்கு, காட்டு விலங்குகளை எதிர்கொள்வது புதிதல்ல என்றாலும், ஒரு பெரிய யானைக் கூட்டத்தையே நேரில் பார்த்தது இதுதான் முதல் அனுபவம் என்றார்.
அவர் பதிவேற்றிய 53 வினாடி வீடியோவில், ஒரு யானை அவ்வழியே வந்த காரை நெருங்குவதைக் காண முடிகிறது.
காரின் விளக்கை அதன் ஓட்டுநர் அணைக்காமல் விட்டதே அதற்குக் காரணம்.
விளக்கொளி யானையின் கவனத்தை ஈர்த்து, அதனை விளையாடத் தூண்டும்.
எனவே இரவு நேரங்களில் யானைகளை எதிர்கொண்டால், வாகனங்களின் வேகத்தைக் குறைத்து விளக்கை அணைத்து விடுமாறும் Hisham ஆலோசனைக் கூறுகிறார்.
அதோடு வாகனத்திலிருந்து வெளியேறி, தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது போன்ற உணர்வை யானைகளுக்கு ஏற்படுத்தி விடாமலிருப்பதும் முக்கிமென்கிறார் Hisham.