கோலாலம்பூர், நவம்பர்-20 – 250 ரிங்கிட் கொடுத்து போலி அடையாள அட்டை (MyKad) வாங்கி வைத்திருந்த பிலிப்பின்ஸ் நாட்டு கணவன்-மனைவி, கோலாலம்பூரில் கைதாகியுள்ளனர்.
இரு வாரங்கள் உளவுப் பார்த்த தேசியப் பதிவுத் துறை, பண்டான் இண்டாவிலிலுள்ள ஒரு வீட்டில் நேற்று சோதனையிட்ட போது இருவரும் சிக்கினர்.
ஈராண்டுகளுக்கு முன்னர் கள்ளத்தனமாக மலேசியாவுக்குள் நுழைந்து, தலைநகரில் ஒரு கும்பலிடம் ஆளுக்கு 250 ரிங்கிட் கொடுத்து அந்த போலி அடையாள அட்டையை அவர்கள் வாங்கியுள்ளனர்.
வேலைத் தேடுவதற்காகவும் சுதந்திரமாக நடமாடும் நோக்கிலும் போலி MyKad அட்டையைப் பெற்றதை அத்தம்பதி ஒப்புக் கொண்டது.
மலாய் மொழியில் சரளமாக பேசும் இருவருமே பாதுகாவலர்களாக வேலை செய்கின்றனர்.
இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கும் அத்தம்பதிக்கு, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 20,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.