வாஷிங்டன்ம் நவம்பர்-21, இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அனைத்துலக விண்வெளி மையத்தில் நலமுடன் உள்ளார்.
அதனை உறுதிபடுத்தியுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அதற்கு ஆதாரமாக சுனிதா உடல் எடை குறைவு ஏதுமின்றி நலமுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அதில், விண்கலத்தின் கண்ணாடி வழியாக சுனிதா புன்னகையுடன் வெளியே பார்ப்பதைக் காண முடிகிறது.
தீபாவளியின் போது விண்வெளியில் இருந்தபடியே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட சுனிதாவுக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டு, உடல் எடையும் குறைந்திருப்பதாக ஏற்கனவே தகவல் பரவியது.
அப்போதே அது குறித்து கருத்துரைத்த நாசா, சுனிதாவுக்கும் அவரோடு அங்குள்ள சக வீரர் புட்ச் வில்மோருக்கும் (Butch Wilmore) உரிய மருத்துவக் கண்காணிப்புகள் இருப்பதாகவும், கவலை வேண்டாமென்றும் கூறியிருந்தது.
எனினும், சுனிதாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து தவறான தகவல்கள் பரவிய நிலையில், அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நாசா இப்புதியப் படத்தை வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதாவையும் வில்மோரையும் Space X விண்கலம் வாயிலாக அடுத்தாண்டு பிப்ரவரியில் பூமிக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.