கோலாலம்பூர், டிசம்பர்-5 – முடிந்தால், பரபரப்பு மிக்க ஏதாவதொரு மருத்துவமனையில் 42 மணி நேரங்களுக்கு தாதியராக வேலை பாருங்கள் என சுகாதார அமைச்சர், துணையமைச்சர், அமைச்சின் மூத்த அதிகாரிகளுக்கு செனட்டர்
Dr ஆர் லிங்கேஷ்வரன் சவால் விடுத்துள்ளார்.
ஷிஃவ்ட் முறையில் பணியாற்றும் தாதியர்களுக்கான குறைந்தபட்ச வேலை நேரத்தை, வாரத்திற்கு 42 மணி நேரங்களிலிருந்து 38 மணி நேரங்களுக்குக் குறைக்கும் தனது பரிந்துரையை வலியுறுத்திய போது, மேலவையில் நேற்று அவர் அச்சவாலை விடுத்தார்.
களத்தில் இறங்கி பார்த்தால் தான் தாதியர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் புரியுமென்றார் அவர்.
அச்சவாலை ஏற்று இரவு நேர ஷிஃவ்ட்டை வெற்றிகரமாக முடித்து, இன்னமும் தெம்போடு இருந்தால் உங்களுக்கு நான் நாசி கண்டார் வாங்கித் தருகிறேன் என லிங்கேஷ் சொன்னார்.
தாதியர்களின் வேலை நேரத்தையும் பணிச் சூழலையும், காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வேலை செய்யும் அலுவலகப் பணியாளர்களுடன் ஒப்பிடக் கூடாது.
வாரத்திற்கு 40 மணி நேரங்களுக்கும் அதிகமாக வேலை செய்யும் தாதியர்கள், நோயாளிகளைப் பராமரிப்பதில் தவறு செய்ய இரு மடங்கு அதிக வாய்ப்பிருப்பது பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
40 மணி நேரங்களுக்கு மேல் பணியாற்றும் தாதியர்கள் மத்தியில், ஊசிப் போடும் போது காயம் விளைவித்தல் மற்றும் தவறான மருந்து கொடுத்தல் போன்ற சம்பவங்கள் 28 விழுக்காடு அதிகரித்துள்ளதாக இன்னோர் ஆய்வு கூறுகிறது.
நீண்ட நேரம் கண்விழித்து பணியாற்றுவதால் தூங்கி விழுவது, தூக்கக் கலக்கத்தில் வாகனமோட்டுவது, வேலையில் கவனமின்மை போன்ற பிரச்னைகளுக்கும் ஆளாவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இது போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட அம்சங்களை நன்கு சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
பொத்தாம் பொதுவாக முடிவெடுத்து சுற்றறிக்கைகளை அனுப்பக் கூடாதென அவர் கேட்டுக் கொண்டார்.