
கோலாலம்பூர், டிச 9 – மலேசியாவில் குடியேற்றக் குற்றங்களைச் செய்த வெளிநாட்டினர் குறைந்த அபராதம் செலுத்துவதன் மூலம் தாங்களாக முன்வந்து சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இம்மாதம் 31ஆம்தேதியோடு முடிவடையும் மலேசிய குடிநுழைவு வெளியேற்றும் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்புவதற்கு பதிவு செய்வதற்காக கோலாலம்பூரிலுள்ள குடிநுழைவுத்துறையின் அலுவலகத்தில் வெளிநாட்டினர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையினால் , குடியேற்றக் குற்றங்களைச் செய்த வெளிநாட்டவர்களுக்கு குறைக்கப்பட்ட 300 முதல் 500 ரிங்கிட் வரையிலான அபராதத்தைச் செலுத்தும் திட்டத்தின் மூலம் வெளிநாட்டவர்கள் தாங்களகவே முன்வந்து தங்களது தாயகத்திற்கு திரும்ப அனுமதிக்கிறது.
வெளிநாட்டினர் குறிப்பாக இந்தோனேசியா மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் குடிநுழைவு அலுவலகத்தில் காலை 8 மணிக்கே வரிசையில் நிற்கும் காணொளியை ஊடகங்கள் வெளியிட்டன. சட்டப்பூர்வ வழக்கை எதிர்கொள்ளாமல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்பும் ஆவணமற்ற குடியேறிகளிடமிருந்து இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்பட்டது.