ஷா ஆலாம், டிசம்பர்-11, சிலாங்கூர் கிள்ளானில் குறைப்பிரசவத்தில் இறந்தே பிறந்த ஆண் குழந்தையை, தனியார் மருத்துவமனை நிர்வாகம் இழிவுப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் புகாரொன்று வைரலாகியுள்ளது.
ஆதாம் (Adham) என பெயரிடப்பட்ட அக்குழந்தை வெறும் ஒரு கண்ணுடன், மூக்கும் ஆசனவாயுமின்றி பிறந்ததாக, அமரர் ஊர்தி நடத்தும் Wan Chai என்பவரின் முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
அக்குழந்தையின் உடலை மருத்துவமனை நிர்வாகம் 2 வாரங்களுக்குக் குளிர் பதனப் பெட்டியில் வைத்ததாகவும், சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்தாததால் அதன் பெற்றோரைத் தடுத்து வைத்ததாகவும் Wan Cai கூறினார்.
கணவர் கட்டணத்தைச் செலுத்தாத வரை, அக்குழந்தையின் தாயை விட முடியாது மருத்துவமனை நிர்வாகம் பிடிவாதம் காட்டியுள்ளது.
ஆனால், குழந்தை ஆதாம் என்ன தவறு செய்தது? அதை குளிர் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமென்ன? தாயைத் தான் தடுத்து வைத்து விட்டீர்கள், குழந்தையை நல்லடக்கம் செய்ய அனுமதித்திருக்கலாமே என Wan Cai கேள்வி எழுப்பினார்.
3,600 ரிங்கிட் கட்டணத்தை நேற்று காலை ஆதாமின் தந்தை அந்த தனியார் மருத்துவமனையிடம் செலுத்தியுள்ளார்.
இதையடுத்தே, தாயையும் குழந்தையையும் மருத்துவமனை விடுவித்ததாகவும், பொது மக்கள் கொடுத்த நன்கொடைகளைக் கொண்டு தனது அமரர் ஊர்தி நிறுவனமே இறுதி காரியங்களை முன்னின்று செய்ததாகவும் Wan Cai குறிப்பிட்டார்.
குளிர் பெட்டியில் வைக்கப்பட்டதால் இறுகிப் பன சிசுவின் உடலை இலகுவாக்க, சுடுநீரையும் ஆறிய நீரையும் கலந்து பயன்படுத்த வேண்டியிருந்ததாகவும் Wan Cai தெரிவித்தார்.
இவ்வேளையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை இது குறித்து இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.