புத்ராஜெயா, டிசம்பர்-11 – ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் 308 குடும்பத் தலைவர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தொடக்கமாக டிசம்பர் 9-ஆம் தேதி தங்காக் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான 50 குடும்பத் தலைவர்களுக்கு அவ்வுதவிகள் வழங்கப்பட்டன.
மறுநாள் செகாமாட்டில் அதிகாரிகளுக்கும் கிராமத் தலைவர்களுக்கும் 231 உணவுக் கூடைகளும், பின்னர் கம்போங் பத்து பாடாக் சமூக மண்டபத்தில் 12 பேருக்கும், தாசேக் கம்போங் ஆலாய் சமூக மண்டபத்தில் 15 பேருக்குமாக நன்கொடைப் பொருட்கள் சேர்ப்பிக்கப்பட்டன.
சிறப்பு விவகாரங்களுக்கான பிரதமரின் அதிகாரி ஷண்முகம் மூக்கன், சம்பந்தப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உணவுப் பொருட்கள், டோட்டோ (toto) மெத்தைகள் உள்ளிட்ட உதவிகளை ஒப்படைத்தார்.
மக்கள் நலனை முன்னிறுத்தும் மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வுதவிகள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இது போன்ற மக்கள் நலப் பணிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும்; இன மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் உரிய உதவிகள் சேர்க்கப்படும்.
மத்திய – மாநில அரசுகளின் அணுக்கமான ஒத்துழைப்போடு, உதவித் தேவைப்படுவோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான உதவிகள் விரைவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கிடைப்பது உறுதிச் செய்யப்படும்.
இது வெறும் உதவிகளைக் கொண்டுச் சேர்க்கும் நடவடிக்கை அல்ல; மாறாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் முன்னெடுப்பாகுமென, ஷண்முகம் கூறினார்.