இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்-17 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் டையர்களை ஓட்டையாக்கிய, 43 வயது ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
கறுப்பு சட்டை மற்றும் அரைக்கால்சட்டை அணிந்த ஆடவர், கார்களைக் கடந்துச் செல்வதும், பின்னர் திரும்பி வந்து கார்களின் டையர் பக்கமாகக் குனிவதும் வைரல் வீடியோக்களில் தெரிகிறது.
கார்களின் உரிமையாளர்கள் திரும்பி வந்துபார்த்த போது, டையர்கள் ஓட்டையாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களில் ஒருவரான 21 வயது பெண் செய்த புகாரை அடுத்து, சந்தேக நபர் கைதானதாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் எம்.குமராசன் கூறினார்.
ஏற்கனவே 6 குற்றப்பதிவுகளைக் கொண்டிருக்கும் அந்நபர்,
விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குமராசன் சொன்னார்.
இதனிடையே, வைரல் வீடியோவின் கீழ் கருத்துப் பதிவிட்ட சில வலைத்தளவாசிகள், சந்தேக நபர் டயர் கடைக்கு அருகில் தான் ‘அவ்வேலையைக்’ காட்டியுள்ளதாகவும், டையர்களை ஓட்டையாக்கி, அதன் மூலம் பழுதுப்பார்க்க வைத்து காசு பார்க்க திட்டம் போட்டிருக்கலாமென்றும் கூறியிருந்தனர்.
எனினும் அதனை குமராசன் உறுதிப்படுத்தவில்லை; காரணம் கண்டறியப்பட்டு வருவதாகச் சொன்னார்.