கோலாலம்பூர், டிசம்பர்-14 – மலேசிய மக்கள் மத்தியில் மிகவும் நம்பகத்தன்மை குறைந்தவர்களாக அரசியல்வாதிகள் திகழ்வது, பிரபல ஆய்வு நிறுவனமான Ipsos மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
41 விழுக்காட்டினர் தாங்கள் அரசியல்வாதிகளையே நம்புவதில்லை எனக் கூறியுள்ளனர்.
கடந்த மே 24 முதல் ஜூன் 7-ம் தேதி வரை 32 நாடுகளில் 23,530 பேரிடம் இணையம் வாயிலாக அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அரசியல்வாதிகளுக்கு அடுத்த நிலையில், influencer-கள் என தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் சமூக ஊடக பிரபலங்களை பெரிதாக நம்புவதில்லை என 36 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
மக்களின் நம்பிக்கையைப் பெறாத வேலையாக அரசாங்க அமைச்சர் பொறுப்புகள் திகழ்கின்றன; 35 விழுக்காட்டு மலேசியர்கள் அமைச்சர்களை நம்புவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஈடாக, விளம்பர நிர்வாகிகள் மற்றும் மதத் தலைவர்களை மக்கள் பெரிதாக நம்புவதில்லை; 30 விழுக்காட்டினர் அவ்வாறு கூறியுள்ளனர்.
உலக மக்களும், அரசியல்வாதிகளைத் தான் நம்ப முடியாதென கூறுகின்றனர்; 58 விழுக்காட்டினருக்கு அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வேளையில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த பணியாக ஆசிரியர் தொழிலை மலேசியர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
59 விழுக்காட்டினர் தாங்கள் ஆசிரியர்களை பெரிதும் நம்புவதாகக் கூறுகின்றனர்; மருத்துவர்களுக்கு 55 விழுக்காடு ஆதரவும், அறிவியலாளர்களுக்கு 49 விழுக்காடும், இராணுவத்தினருக்கு 49 விழுக்காடும், நீதிபதிகளுக்கு 43 விழுக்காடும் கிடைத்துள்ளது.
நம்பகத்தன்மை மிக்கவர்கள் பட்டியலில் உலகளவில் பார்த்தால், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், உணவகப் பணியாளர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.