கோலாலங்காட், டிச 20 – வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தை தவறிவிடாமல் இருப்பதற்காக ஆடவர் ஒருவர் தனது SUV வானத்தின் மூலம் ஆம்புலன்ஸ் வழித்தடத்திற்கு தடையாக இருந்த காணொளி வைரலானது. நேற்று
ஜாலான் கிளாங் -பந்திங்கில் நடந்த ஒரு சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஓட்டிச் சென்ற அந்த வாகனம் மூன்று முறை ஆம்புலஸ்ஸ் வண்டிக்கான வழித்தடத்தை தடுத்ததை வைரலான 59 வினாடிகளைக் கொண்ட காணொளியில் காண முடிந்தது. இரவு 9.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் ஆம்புலன்ஸின் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி வழிவிடுமாறு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோரிக்கை விடுத்த போதிலும் அதனை அந்த வாகன ஓட்டுனர் அலட்சியப்படுத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது.
பந்திங் மருத்துவமனையிலிருந்து Jenjarom சுகாதார கிளினிக்கிற்கு அந்த ஆம்புலன்ஸ் வண்டி நோயாளியை ஏற்றிச் சென்றபோது அதற்கான வழிதடம் மறைக்கப்பட்டது விசாரணை மூலம் தெரியவந்ததாக கோலாலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அக்மால்ரிசால் ரட்ஷி ( Akmalrizal Radzi) தெரிவித்தார். மேலும் அந்த SUV வாகன ஓட்டுனர் தனது வாகனத்தை ஆபாத்தான முறையில் செலுத்தியுள்ளார். இரவு மணி 11.30 மணியளவில் அந்த வாகன ஓட்டுனரின் தந்தையை பந்திங் வட்டாரத்தில் போலீசார் அடையாளம் கண்டதாக அக்மால்ரிசால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். கே.எல்.ஐ.ஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு செல்லும் அவசரத்தில் அந்த வாகனத்தை ஓட்டியநபர் ஆம்புலன்ஸ் வண்டி செல்வதற்கு தடையாக இருந்துள்ளதால் 1987 ஆம் ஆண்டின் போக்குவரத்து சட்டம் 42 விதிமுறையின் (உட்பிரிவு 1) இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக
அக்மால்ரிசால் கூறினார்.