
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-20, நாளை கோலாலம்பூரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவுக் கருத்தரங்கு 2.0 நிகழ்ச்சிக்கு, பினாங்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இளைஞர் பகுத்தறிவு என்ற பெயரை வைத்துக் கொண்டு, தேசியக் கோட்பாடுகளுக்கு எதிராக அவர்கள் செயல்படுகின்றனர்.
மலேசியச் சூழலுக்குப் பொருந்தாத திராவிட சித்தாந்தத்தையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் அவர்கள் பரப்புகின்றனர்.
இது மலேசிய இந்துக்களின் மனங்களைப் புண்படுத்துகின்றது; இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது;
எனவே, உள்துறை அமைச்சர் தலையிட்டு நாளைய அந்நிகழ்வை இரத்துச் செய்ய வேண்டுமென, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர் கேட்டுக் கொண்டார்.
அவர் தலைமையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், செனட்டர் Dr ஆர்.லிங்கேஷ்வரன், பினாங்கு ம.இ.கா தலைவர் தினகரன், மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், மற்றும் இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.
தங்களுக்குத் தெரிந்தவரை நாளையக் கருத்தரங்கிற்கு இன்னும் போலீஸ் பெர்மிட் வழங்கப்படவில்லை; ஒருவேளை வழங்கப்பட்டிருந்தால் அதனை கோலாலம்பூர் போலீஸ் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ராயர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், கருஞ்சட்டை இளைஞர் படையின் பன்னாட்டு பகுத்தறிவுக் கருத்தரங்கம் 2.0, நாளை திட்டமிட்டப்படி நடைபெறுமென ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
தங்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் குறிப்பிட்ட அச்செயற்குழு, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெறுமென அறிக்கையொன்றில் கூறியது.
பன்னாட்டு பகுத்தறிவு கருத்தரங்களில் இவ்வாண்டு சமூகப் பொருளியல், சாதிவெறி, காலநிலை மாற்றம், சோசலிடம், மனிதநேயம், பெண்ணியம் போன்ற கருத்துகள் கலந்துரையாடப்படுமென அது கூறிக் கொண்டது.