ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-23 – அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்காக பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் 70,000 ரிங்கிட் முதல் 80,000 ரிங்கிட் நிநி வழங்கப்படுகிறது.
அனைத்துத் தேவைகளையும் பூர்த்திச் செய்ய அந்நிதி போதாது என்றாலும், அது குறைக்கப்படாது என முதல் அமைச்சர் ச்சௌவ் கோன் இயோவ் (Chow Kon Yeow) உத்தரவாதம் அளித்தார்.
மாறாக, மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து மேம்பாடு கண்டிட, நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்றார் அவர்.
கடந்த 15 ஆண்டுகளாகத் தொடரும் இந்நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் வசதிக் கட்டமைப்புகள் ஆண்டுக்கு ஆண்டுக்கு தரமுயர்ந்து வருகின்றன.
பினாங்குத் தமிழாசிரியர்களின் 2024 அனைத்துலக மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவுச் செய்து வைத்து உரையாற்றுகையில் அவர் அவ்வாறு சொன்னார்.
பினாங்கு அரசு கடந்தாண்டு முதல் தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும் பாலர் பள்ளிகள், பஞ்சாபி பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் செயற்குழுவின் சிறப்பு நிதியம் ஆகியவற்றுக்கு 2.39 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அந்த இரு நாள் மாநாட்டில் சுமார் 500 பினாங்கு தமிழாசிரியர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர், மொரிஷியஸ், நியூ சிலாந்து, இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் இணையம் வாயிலாக பங்கேற்றனர்.