குவாலா லங்காட், டிசம்பர்-23 – புதியப் பள்ளித் தவணை தொடக்க உதவி நிதி 2025/2026 கல்வியாண்டு தொடங்கி ஆறாம் படிவ மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.
முதன் முறையாக STPM மாணவர்களுக்கு அந்த 150 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
இதன் மூலம் 100,000-க்கும் மேற்பட்ட ஆறாம் படிவ மாணவர்கள் பயன் பெறுவர்.
இது அரசாங்கத்துக்கு 15 மில்லியன் செலவைக் கொண்டு வரும்.
நடப்பு ஆறாம் படிவ மாணவர்களுக்கு வரும் பிப்ரவரியில் அந்நிதி விநியோகம் செய்யப்படும்.
ஆறாம் படிவத்தில் நுழையும் புதிய மாணவர்கள் அடுத்தாண்டு ஜூலையில் அதனைப் பெறுவர்.
புதியப் பள்ளித் தவணை தொடங்கும் போது செலவுகளைச் சமாளிப்பதில் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் சுமையைக் குறைக்கும் மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டை அது காட்டுவதாக அவர் சொன்னார்.
அதோடு ஆறாம் படிவக் கல்வியை வலுப்படுத்தும் கல்வி அமைச்சின் திட்டத்திற்கு ஏற்பவும் அது அமைகிறது.
மேலும் ஏராளமானோர் ஆறாம் படிவத்தைத் தேர்ந்தெடுக்க அமைச்சு ஊக்குவிக்கிறது என்றார் அவர்.
குவாலா லங்காட், லாடாங் தும்போக் தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் ஃபாட்லீனா பேசினார்.