கோலாலம்பூர், டிசம்பர்-30, உடல் எடை குறைப்புக்குத் தீர்வாகக் கூறப்படும் Ozempic மீதான உலகளாவிய மோகம் மலேசியாவையும் விட்டு வைக்கவில்லை.
மருந்தகங்களில் அந்த நீரிழிவு மருந்துக்கான தேவை கணிசமாக அதிகரித்து, தற்போது கையிருப்புக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Ozempic என்பது இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு, அவர்களின் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் ஊசி மருந்தாகும்.
ஆனால் உடல் எடையைக் குறைப்பதில் அம்மருந்து ஆக்ககரமாகச் செயல்படுவதால், நீரிழிவு நோயாளி அல்லாதோரும் அதனை அதிகளவில் தேடி வருவதே பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமென,
மலேசிய மருந்தகங்கள் சங்கத்தின் தலைவர் அம்ராஹி புவாங்(Amrahi Buang) தெரிவித்தார்.
மருத்துவரின் மருந்துச் சீட்டு இருந்தால் மட்டுமே Ozempic கிடைக்குமென்றாலும், நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களின் கைகளுக்கு அது எப்படியோ கிடைத்து விடுவதாக அம்ராஹி The Star-ரிடம் குறிப்பிட்டார்.
நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்கள் உடல் எடைக் குறைப்புக்காக இந்த Ozempic மருந்தைத் தவறாகப் பயன்படுத்துவது இதன் வழி நிரூபணமாகியுள்ளது.
அம்மருந்து மலேசியாவில் அந்த நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; அல்லது புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
மருத்துவ மேற்பார்வையின்றி அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக மருந்துகளைப் பயன்படுத்தும் செயல், உயிருக்கே ஆபத்தாய் முடியலாமென அம்ராஹி எச்சரித்தார்.
குறிப்பாக Ozempic மருந்துகளால் குறைந்த இரத்தச் சர்க்கரை அளவு போன்ற பக்க விளைவு ஏற்படும் சாத்தியமுள்ளது.
எனவே எதிர்பாராத விளைவுகளைத் தடுக்க மருந்துகளின் சரியான பயன்பாடு குறித்து பொதுமக்கள் எப்போதும் மருந்தாளர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
சில அழகியல் கிளினிக்குகளில் இந்த Ozempic ஊசி மருந்துகள் சார்ந்த உடல் எடைக் குறைப்பு பேக்கேஜ்கள், விளம்பரப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.