கோலாலம்பூர், டிசம்பர்-31,
இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அடுத்தாண்டு மேலும் ஏராளமான திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதனைக் கோடி காட்டியுள்ளார்.
முடியும் இந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியச் சமூகத்துக்காக KUSKOP-பின் கீழ் 7 அம்சத் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
வணக்கம் மடானி தொடங்கி, SPUMI இந்தியத் தொழில் முனைவர் மேம்பாட்டுத் திட்டம், பெண் தொழில்முனைவர்களுக்கு அமானா இக்தியார் கீழ் PENN திட்டம், BRIEF-i தொழில்முனைவோர் கடனுதவித் திட்டம் என அப்பட்டியல் நீளுகிறது.
இத்திட்டங்கள் வாயிலாக ஏராளமான இந்தியர்கள் பயனடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக புத்தாண்டிலும் ஏராளமான சமூகப் பொருளியல் மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
நேரம் வரும் போது அவற்றை அறிவிப்பேன் என, 2025 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
நாட்டின் வளர்ச்சிக்கேற்ப இந்தியச் சமூகமும் மேம்பாடு காண வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பமும் ஆகும்.
அதனை உறுதிச் செய்ய, இந்தியர்களுக்கு ஏராளமான பயனுள்ளத் திட்டங்களை வரையுமாறு பிரதமரே நேரடி உத்தரவுப் போட்டுள்ளார்.
அதன்படி சமூகத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளைத் தாம் தொடருவேன் என்றார் அவர்.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு இந்தியச் சமூகம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.