வாஷிங்டன், ஜனவரி-1, அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் சொந்தமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட 150-கும் மேற்பட்ட குண்டுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையான FBI-யின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமாக வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
Brad Spafford எனும் 36 வயது ஆடவரின் வீட்டில் அதிரடி சோதனையில் இறங்கிய போது அந்த வெடிப்பொருட்கள் சிக்கின.
அவர் ஆயுதங்கள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருப்பதாக, பக்கத்து வீட்டுக்காரர் மூலம் முன்னதாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது.
வீட்டின் படுக்கையறையில் முதுகில் மாட்டும் பயணப் பெட்டியினுள் குழாய் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதோடு குளிர்சாதனப் பெட்டியில் உணவோடு உணவாக மிகவும் அபாயகரமான HMTD வெடிப்பொருட்களை ‘தொடாதீர்கள்’ என்ற லேபலிட்டு வைத்துள்ளார்.
கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடிப்பொருட்களைக் கைப்படத் தயாரிக்கும் செய்முறைகள் அடங்கிய புத்தகமும் கைப்பற்றப்பட்டது.
இயந்திர கடையில் வேலை செய்யும் Spafford, பதவி விலகிச் செல்லும் அதிபர் ஜோ பைடனின் படத்தை மாட்டி வைத்து அதனைக் குறி பார்த்து துப்பாக்கிச் சுடும் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.
அரசியல் படுகொலைகளுக்கும் அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்தவர் என அண்டை வீட்டார் மூலம் தெரிய வந்தது.
வீட்டில் மனைவி மற்றும் இரு சிறு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த Spafford-க்கு, 360 பாகை கோபுரத்துடன் கூரையின் உச்சியில் 50 calibre சக்தி வாய்ந்த துப்பாக்கியை நிறுவுவது கனவுத் திட்டமாகும்.
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள Spadford, வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்ததாகக் கூடுதல் குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.
குற்றம் நிருபிக்கப்பட்டால் இரண்டுக்குமே தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.