Latestமலேசியா

பாஸ் ‘மக்களின் நல்லிணக்கத்தை சிதைக்ககூடிய’ கட்சி; கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கடும் சாடல்

கோத்தா கெமுனிங், ஜனவரி-7 – இன-மத விவகாரங்களை கையிலெடுத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள பாஸ் கட்சி, ‘அரசியல் மனச்சிதறல் நோயுள்ள’ கட்சி.

குறுகிய மனப்பான்மையோடு பல்லின மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதை அது இன்னும் விடவில்லை என, சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சாடினார்.

வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர்  ஹானா இயோ இருவருக்கும் எதிராக தலைநகர், கம்போங் பாருவில் அண்மையில் பாஸ் நடத்திய ஆர்ப்பாட்டமே அதற்கு சான்று.

அவ்விரு DAP தலைவர்களும் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் என்றும் மலேசியாவை கிறிஸ்துவ நாடாக மாற்ற முயற்சிப்பதாகவும் கூறி அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது மட்டுமல்ல; தீய எண்ணத்தைக் கொண்டது என பிரகாஷ் சாடினார்.

கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டம் மதங்களைப் பரப்பும் நோக்கத்தைக் கொண்டதல்ல; மாறாக, வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் மலேசியர்களின் கலாச்சார பகிர்வாகும்.

ஆனால் அதையும் சர்ச்சையாக்கி பாஸ் கட்சி குளிர்காய்கிறது.

உண்மையிலேயே மக்களால் மதிக்கப்பட விரும்பினால் பாஸ் கட்சி இந்த இன-மத விவகாரங்களை விட்டொழிக்க வேண்டும்.

மாறாக மக்கள் நலனை முன்னேற்றும் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

அதை விடுத்து பிளவுப்படுத்தும் செயல்களில் இறங்கக் கூடாது என அறிக்கையொன்றில் பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!