கோலாலம்பூர், ஜனவரி-7, நாட்டிலுள்ள இந்தியக் கேளிக்கை மையங்களில் முறையான வேலை பெர்மிட் இல்லாத வெளிநாட்டுக் கலைஞர்களை வேலைக்கு அமர்த்துவது, அண்மையக் காலமாக அதிகரித்து வருகிறது.
அவ்வாறு செய்வது சட்டவிரோதமென்றாலும், ஏராளமான கேளிக்கை மையங்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை.
இது, எந்த வகையிலும் திறமையில் குறைச்சல் இல்லாத உள்ளூர் கலைஞர்களுக்கு நியாயமானதாக இல்லையென, PERSATAM எனப்படும் மலேசியத் தமிழ் கலைஞர்களின் குரல் இயக்கம் கருதுகிறது.
வெளிநாட்டு கலைஞர்கள் குறைவான கட்டணம் விதிப்பதால், ஆரோக்கியமற்றப் போட்டி நிலவுகிறது; இதனால் உள்நாட்டு கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது.
இதையடுத்து, குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநருக்கு தாங்கள் அதிகாரப்பூர்வ கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக, அவ்வியக்கத்தின் தலைவர் மதன் பெரியண்ணன் கூறினார்.
அவ்வகையில் வெளிநாட்டு கலைஞர்களின் சேவையைப் பெறும் கேளிக்கை மையங்களில் விரிவான சோதனைகளையும் அமுலாக்க நடவடிக்கைகளையும் குடிநுழைவுத் துறை மேற்கொள்ள வேண்டும்;
அதோடு அனைத்து வெளிநாட்டுப் பாடகர்களும் முறையான வேலை பெர்மிட் வைத்திருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்;
இது தவிர, அந்நியத் தொழிலாளர் சட்டத்தைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து கேளிக்கை மையங்களின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வும் அதிகரிக்கப்பட வேண்டுமென PERSATAM வலியுறுத்தியுள்ளது.
உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கலைத் துறை நலனுக்காக தங்களின் கோரிக்கையை ஏற்று இவ்விவகாரத்திற்கு உடனடி தீர்வுக் காணப்படுமென மதன் எதிர்பார்ப்பை வெளியிட்டார்.