புத்ரா ஜெயா, ஜன 10 – மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவிற்கு இன்று பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது. இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்படுவதற்கு முன்பு காலை மணி 9.02 அளவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜப்பானிய பிரதமரை வரவேற்றார். மேஜர் அரிபுதீன் முகமது யூசுப் ( Arifuddin Mohd Yusuf ) தலைமையிலான அரச ரேஞ்சர் படைப்பிரிவின் முதல் பட்டாளத்தின் மூன்று அதிகாரிகள் மற்றும் 103 வீரர்கள் அடங்கிய மரியாதை அணிவகுப்பை இஷியா பார்வையிட்டார். . இந்த நிகழ்வில் பிரதமர் யோஷிகோ இஷிபாவின் மனைவி, அன்வாரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபரில் ஜப்பான் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் அதிகாரப்பூர்வ வருகையை குறிக்கும் வகையில், ஷிகெரு இஷிபா வியாழக்கிழமை மலேசியா வந்தடைந்தார். அவரை வரவேற்கும் நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு , இஷிபாவும் அன்வாரும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள், குறிப்பாக வர்த்தகம், முதலீடு, மனிதவள மேம்பாடு மற்றும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளில் முன்னேற்றம் குறித்து விவாதிக்க இருதரப்பு சந்திப்பை நடத்தினர். மத்திய கிழக்கின் நிலைமை உட்பட பரஸ்பர நலன் சார்ந்த வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் அவ்விரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.