இஸ்கந்தர் புத்ரி, ஜன 10 – வாங்கிய கடனை திரும்ப செலுத்தத் தவறியதால் உணவகத்தில் உணவு உட்கொண்டிருந்த ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டதால் காயம் அடைந்ததோடு தனக்கு அறிமுகமான நபர்களால் காரில் இழுத்துச் செல்லப்பட்டார். ஸ்கூடாய் , தாமான் நுசா பெஸ்தாரியில் உள்ள உணவகத்தில் தாக்கப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரான 34 வயதுடைய அந்த ஆடவர் , சந்தேக நபருக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக RM37,000 கடன்பட்டிருப்பதாக நம்பப்படுவதாக இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் எம். குமரேசன் தெரிவித்தார். இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட நபருடன் உணவு உட்கொண்டிருந்த தனது நண்பரை கும்பல் ஒன்று இழுத்துச் சென்றதால் அவர் காணவில்லையென 29 வயது பெண் ஒருவரிடமிருந்து புகாரை பெற்றதாக குமரேசன் தெரிவித்தார்.
அதன்பிறகு மறுநாள் அதிகாலை மணி 1.20 அளவில் தாமான் நூசா பெஸ்தாரா வட்டாரப் பகுதியில் ஐந்து சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதோடு அக்கும்பலால் இழுத்துச் செல்லப்பட்ட நபரும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குமரேசன் தெரிவித்தார். காரில் இழுத்துச் செலுத்தப்பட்ட 5 மணி நேரத்திற்குப் பின் அந்த ஆடவர் பாதுகாப்புடன் கண்டுப்பிடிக்கப்பட்டதோடு 20 முதல் 20 வயதுடைய அந்த ஐந்து ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் போதைப் பொருள் குற்றப் பின்னணி இருப்பதும் தெரியவந்தது. இந்த நடவடிக்கையின்போது இரண்டு ஆடம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவரை தாக்கி காயப்படுத்தியது மற்றும் தடுத்து வைத்திருந்தது தொடர்பில் நான்கு சந்தேகப் பேர்வழிகள் மீது புதன்கிழமையன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மற்றொரு சந்தேகப் பேர்வழி போலீஸ் சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளதாக குமரேசன் தெரிவித்தார்.