
கோலாலம்பூர், ஜனவரி-10, பள்ளிப் பேருந்து நடத்துநர் சங்கத்திற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் இடையில் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே, அடுத்த மாதம் 5 முதல் 10 ரிங்கிட் வரையில் பள்ளிப் பேருந்துக் கட்டண உயர்வு அமுலுக்கு வருகிறது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அதனைத் தெரிவித்துள்ளார்.
பள்ளிப் பேருந்துக் கட்டணங்கள் அமைச்சின் அதிகாரத்தின் கீழ் இல்லை; எனவே அதனை அமைச்சு நிர்ணயிப்பதில்லை என்றார் அவர்.
பள்ளிப் பேருந்து நடத்துநர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் இடையில் செய்யப்படும் முடிவு அது என அந்தோனி லோக் விளக்கினார்.
பிப்ரவரியில் தொடங்கும் புதியப் பள்ளி தவணையில், பள்ளிப் பேருந்துக் கட்டணங்கள் 25 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு வரை உயரக் கூடுமென, மலேசியப் பள்ளி பேருந்து தொழில் நல அமைப்பு முன்னதாகக் கூறியிருந்தது.
பள்ளிப் பேருந்துகளுக்கு மானிய விலையில் டீசல் ஒதுக்கீடு இருந்தாலும், உபரிப் பாகங்களின் விலை உயர்ந்துள்ளதால், பேருந்துக் கட்டண உயர்வைத் தவிர்க்க இயலாது என, மலேசியப் பள்ளிப் பேருந்து சங்கங்களின் சம்மேளனமும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.