
கோலாலம்பூர், ஜனவரி-17,பூமிபுத்ராக்களைக் கைத் தூக்கி விடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட DEB எனப்படும் புதியப் பொருளாதாரக் கொள்கை, காலத்திற்கும் நீடிக்க முடியாது.
படிப்படியாக அதனை அகற்றித்தான் ஆக வேண்டுமென முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் கூறியுள்ளார்.
DEB கொள்கை குறிப்பிட்ட அளவு அதன் நோக்கத்தை அடைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
தொழில்முனைவு மற்றும் வர்த்தகத் துறையில் முன்னேற்றங்கள் உள்ளன; சில மலாய்க்காரர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.
எனினும், வணிகக் கலாச்சாரத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெரும்பாலோர் தோல்வியடைந்துள்ளனர்.
எனவே, இன அடிப்படையிலான அக்கொள்கை இன்னமும் தேவைப்படுகிறது.
1971-ஆம் ஆண்டில் அது அறிமுகப்படுத்தப்படாமல் மட்டும் இருந்திருந்தால், மலாய்க்காரர்களுக்கும் மற்ற இனங்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி இன்னும் அதிகமாயிருக்கும்.
இதனால் சமூகங்களுக்கு இடையில் பதற்றமும் அதிகரித்திருக்குமென மகாதீர் சுட்டிக் காட்டினார்.
ஆனால் அக்கொள்கையை அகற்றுவதற்கான காலம் ஒரு நாள் வந்தே தீரும்…
ஆக, DEP இருக்கும் வரை அதனை மலாய்க்காரர்கள் நன்கு பயன்படுத்தி, மற்ற இனங்களுக்கு ஈடாக தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டுமென மகாதீர் கேட்டுக் கொண்டார்.
Khabarnya என்ற போட்காஸ்ட் உரையாடலில் அப்பெருந்தலைவர் அவ்வாறு கூறினார்.
1969, மே 13 இனக்கலவரத்தின் எதிரொலியாக 1971-ஆம் ஆண்டில் அப்போதையப் பிரதமர் துன் அப்துல் ரசாக் இந்த DEB கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
பெரும்பான்மை இனத்தவர்களான பூமிபுத்ராக்களுக்கு ஆதரவான உறுதியான செயல் திட்டங்கள் மூலம், இனங்களுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதை அது நோக்கமாகக் கொண்டது.