ஜோகூர் பாரு, ஜன 20 – ஜோகூர் மாநில ம.இ.கா இளைஞர் ,மகளிர், புத்ரா மற்றும் புத்திரி ஏற்பாட்டில் ஒற்றுமை பொங்கல் விழா நிகழ்ச்சி எதிர்வரும் ஜனவரி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு , ஜாலான் உங்கு புவான் (Jalan Ungku Puan) , லிட்டல் இந்தியா வளாக பகுதியில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநில ம.இ.கா தலைவரும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான ரவின் குமார் கிருஷ்ணசாமி பொங்கல் நிகழ்வை அதிகாரப் பூர்வமாக தொடக்கிவைப்பார்.
மேலும் மாநில ம.இ.காவின் துணைத்தலைவர் டத்தோ நிலராஜா மற்றும் மாநில ம.இ.கா பொறுப்பாளர்ளும் கலந்துகொள்வார்கள். இந்த நிகழ்சியை ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் நிறைவு செய்வார் என ஜோகூர் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் மோகன் அருணாசலம் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காலையில் பொங்கல் வைக்கப்படுவதோடு பல்வேறு கலச்சார நிகழ்ச்சியும் , பாரம்பரிய போட்டி விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
சிலம்பம் ,உறுமி மேளம், நாதஸ்வரம் , பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், கோலாட்டம் உரி அடித்தல், மயிலாட்டம் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பான பரிசுகளும் வழங்கப்படும்.
எனவே இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக வருகை புரிந்து ஆதரவு தெரிவிக்கும்படி மோகன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.