
செப்பாங், ஜனவரி-28, Keluar Sekejap போட்காசில் கைரி ஜமாலுடின் பேசியது மீதான போலீஸ் விசாரணையில், மலேசியா கினி வெறும் சாட்சி மட்டுமே.
மாறாக விசாரணைக்கு குறிவைக்கப்பட்ட தரப்பல்ல என தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
எனவே மலேசியா கினியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினி விரைவிலேயே அந்த இணையச் செய்தி ஊடகத்திடம் திருப்பி ஒப்படைக்கப்படுமென ஃபாஹ்மி சொன்னார்.
மலேசியா கினி நிர்வாக இயக்குநர் RK ஆனந்த் நேற்று போலீஸ் விசாரணைக்கு ஆளானதாடு, அவரிடமிருந்து மடிக்கணினியும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதோடு மலேசியா கினியின் ‘backend’ கணினி அமைப்புக்குள் போலீஸை நுழைய விடவும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
போலீஸாரை ‘backend’ முறையில் நுழைய அனுமதிக்கா விட்டால், அது ஒரு குற்றமாகக் கருதப்பட்டு மலேசியா கினி மீது நடவடிக்கை எடுக்கப்படுமென, மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC-யும் எச்சரித்திருந்தது.
இது பெரும் சர்ச்சையான நிலையில், போலீஸின் அந்நடவடிக்கை அப்பட்டமான அதிகார மீறல் என, கல்விமான்களும் ஊடக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது குறித்து ஃபாஹ்மி கருத்துரைத்தார்.
கைரி ஜமாலுடின் பேச்சு தொடர்பில், பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலீனா ஒத்மான் சாயிட்டின் சிறப்பு அதிகாரி சுராயா யாக்கோப் முன்னதாக போலீஸில் புகார் செய்திருந்தார்.
டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்கும் கூடுதல் உத்தரவை டத்தோ ஸ்ரீ அசாலீனா ‘மூடி மறைத்ததாக’ அர்த்தம் வரும் தோரணயில் கைரி அந்த போட்காசில் குறிப்பிட்டிருந்தார்.