
அலோர் ஸ்டார், டிசம்பர்-9 – கெடாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கடந்த 10 நாட்களாக மூடப்படிருந்த அலோர் ஸ்டார், சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம், இன்று காலை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
கோலாலம்பூர், சுபாங், ஜோகூர் பாரு ஆகியவற்றுக்கான உள்நாட்டுப் பயணங்கள் உட்பட, மொத்தம் 14 விமானச் சேவைகள் இன்று மேற்கொள்ளப்படுகின்றன.
அவற்றில் 7 விமானங்கள் வந்திறங்கவும் 7 விமானங்கள் புறப்படவும் அட்டவணையிடப்பட்டுள்ளதாக, விமான நிலையத் தலைவர் இக்ராம் அலிஃப் மன்சூர் (Ikram Alif Mansoor) தெரிவித்தார்.
இன்று தனது செயல்பாட்டைத் தொடங்கும் Batik Air விமான நிறுவனமும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
விமானப் பயணச் சேவைகளின் சமூகம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, Malaysia Airport Berhad-டின் 80 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இன்று காலை இதுவரை வந்திறங்கிய மற்றும் புறப்பட்ட விமானங்களின் பயணங்கள் சுமூகமாக இருந்ததாகவும் இக்ராம் கூறினார்.
நவம்பர் 29-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையையும் வெள்ளம் சூழ்ந்ததால், அது முழுவதுமாக மூடப்பட்டது.