கோலாலம்பூர், பிப்ரவரி-6 – மலேசிய மற்றும் உஸ்பெகிஸ்தான் நிறுவனங்கள், இரு நாடுகளும் வழங்கும் ஒருங்கிணைந்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி புதிய ஒத்துழைப்புகளை உருவாக்க வேண்டும்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ சஃப்ருல் அப்துல் அசீஸ் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, கோலாலம்பூரில் நடைபெற்ற வணிகத்திலிருந்து வணிகம் (B2B) மற்றும் அரசாங்கத்திலிருந்து வணிகம் (G2B) அமர்வுகள், 2 நாடுகள் இடையிலான முக்கிய தொழில்கள் பற்றிய விவாதங்களை எளிதாக்கியதோடு புதிய வியூக ஒத்துழைப்புகளுக்கும் வழி வகுத்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
அதன் போது, மின்னியல், வாகனத் தொழில், நீர் மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றல், இரசாயனத் தொழில், உணவுத் தொழில் மற்றும் மருந்து தயாரிப்புகள் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பில் இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
அந்நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் (Shavkat Mirziyoyev) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
2-நாள் பணி நிமித்தப் பயணமாக ஷல்கத் மலேசியா வந்துள்ளார்.
மலேசியா, உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான முக்கிய மையமாகத் திகழ்வதோடு, சிறந்த உள்கட்டமைப்பு, வலுவான இணைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் திறமையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், பல துறைகளில் மலேசியாவுடன் நெருங்கிய உறவுகளை வளர்ப்பதில் குறிப்பாக மலேசியாவின் அனுபவம், நிபுணத்துவம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் ஒத்துழைக்க உஸ்பெகிஸ்தான் காட்டும் ஆர்வம் ஆக்கப்பூர்வமாக இருப்பதாக தெங்கு சஃப்ருல் கூறினார்.