
காஜாங், பிப்ரவரி-8 – சிலாங்கூர் காஜாங் மற்றும் பண்டார் பாரு பாங்கியில் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் 10 குடியிருப்புகளில், குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது.
பொது மக்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, 3 நாட்கள் வேவுப் பார்த்து, புத்ராஜெயா தலைமையகத்தைச் சேர்ந்த 51 அதிகாரிகள் வியாழக்கிழமை நள்ளிரவில் அச்சோதனைகளில் இறங்கினர்.
மொத்தமாக 110 பேர் பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் ஒரு சிறுமி உட்பட 66 பேர் கைதாகினர்.
கைதானவர்கள் இந்தோனீசியா, வங்காளதேசம் மற்றும் மியன்மார் நாட்டவர்கள் ஆவர்.
குடிநுழைவுச் சட்ட மீறல் தொடர்பான விசாரணைக்காக அனைவரும் புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.