
கோலாலம்பூர், பிப்ரவரி-14 – 2023-ல் 3.6 விழுக்காடாக பதிவான மலேசியப் பொருளாதாரம், கடந்தாண்டு 5.1 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
கடந்தாண்டின் 4-ஆவது காலாண்டிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாகப் பதிவானது.
உள்நாட்டு தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், ஏற்றுமதியில் ஏற்பட்ட மீட்சியாலும் இந்த வலுவான அடைவுநிலை சாத்தியமானதாக, மத்திய வங்கியான பேங்க் நெகாரா கூறியது.
மக்கள் மத்தியில் பணம் புழங்கி அவர்கள் தாராளமாகச் செலவு செய்ததும் இவ்வளர்ச்சிக்கு உதவியுள்ளது; நல்ல பணப் புழக்கம் ஊக்களிக்கும் சந்தை நிலவரங்களைப் பிரதிபலிக்கிறது.
அதோடு குடும்பங்கள் மற்றும் அவர்களின் நிதி நிலைமையை ஆதரிக்கும் வகையிலான கொள்கை நடவடிக்கைகளும் ஒரு முக்கியக் காரணமாகும்.
தவிர, வலுவான முதலீடுகள், தொடரும் பெருந்திட்டங்கள் உள்ளிட்டவையும் முதலீட்டு வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளன.
வெளிக் காரணிகள் என்று பார்த்தால், உலகலாய பொருளியல் நிலைத் தன்மையால் ஏற்றுமதி மீட்சியடைந்திருப்பது, தொழில்நுட்ப சுழற்சி மற்றும் சுற்றுப் பயணிகளின் வருகையும் அவர்கள் இங்கு செலவு செய்ததும், பொருளாதர வளர்ச்சிக்கு உதவியுள்ளன.
கடந்தாண்டு ஒட்டுமொத்த பண வீக்க விகிதமும், அடிப்படை பணவீக்கமும் முறையே 1.8 விழுக்காடு குறைந்து, 2.5 மற்றும் 3.0 விழுக்காடாக பதிவாகின.
ரிங்கிட்டின் மதிப்பும் கடந்தாண்டு அமெரிக்க டாலருக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 2.7 விழுக்காடு உயர்ந்ததாக, பேங்க் நெகாரா தெரிவித்தது.