
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-14 – பினாங்கு அரசாங்கம் மார்ச் 1 முதல் “தினமும் பிளாஸ்டிக் பைகள் அற்ற நாள்” என்ற பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் நீடித்த நிலையான எதிர்காலத்தை அடைவதையும் அப்பிரச்சார இயக்கம் நோக்கமாகக் கொண்டிருப்பதாக, வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ கூறினார்.
பினாங்கு முழுவதும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை இலவசமாக விநியோகிப்பதன் மூலம் அப்பிரச்சாரம் தொடங்கும்;
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிலிருந்து பொது மக்கள் மெல்ல மாறுவதற்கு ஏதுவாக மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை, 6 மாத கால அவகாசம் வழங்கப்படுமென்றார் அவர்.
வணிகங்களும் பொது மக்களும் இப்புதிய விதிமுறைகளுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள ஏதுவாக இந்த 6 மாத கால அவசாகம் வழங்கப்படுகிறது; செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமுலாக்க நடவடிக்கைகள் முழு வீச்சில் தொடங்கும்.
தொடக்கமாக, பினாங்கு பசுமை மன்றம் பிரச்சாரத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட 100,000 பைகளை மக்களுக்கு வழங்கும்; அதன் பிறகு, இந்தப் பைகள் விற்பனைக்கு வரும்.
இன்று Swettenham Pier Cruise Terminal முனையத்தில் இந்த ‘No Plastic Bags Every Day’ பிரச்சார இயக்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ கூறினார்.
2009-ஆம் ஆண்டில் பினாங்கு “இலவச பிளாஸ்டிக் பைகள் இல்லை” என்ற பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது; இதன் மூலம் வணிகங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச பிளாஸ்டிக் பைகளை வழங்குவதை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்ட முதல் மாநிலம் இதுவாகும்.
முன்பு திங்கள் முதல் புதன் வரை “பிளாஸ்டிக் பைகள் இல்லை” என்ற விதிமுறையை பினாங்கு அறிமுகப்படுத்தியது; அதுவே வியாழக்கிழமை முதல் வெள்ளி வரை பிளாஸ்டிக் பைகளுக்கு 1 ரிங்கிட் வசூலிக்கப்பட்டது.
இம்முயற்சியின் கீழ், 2009 முதல் பினாங்கு அரசு 8 மில்லியன் ரிங்கிட்டை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.