
கோலாலம்பூர் ,பிப்.25 – மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலக அரங்கில் அறிமுகம் செய்வதற்கு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக, தமிழ் மக்கள் வாழும் நாடுகளின் தூதர்களை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறது.
இதற்கு முன்னர் மொரிசியஸ் தூதர், இந்திய தூததர் ஆகியோரை சந்தித்துள்ள மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நேற்று காலையில் , மலேசியாவிற்கான இலங்கையின் இடைக்கால தூதர் எம்.ஐ.முகமட் ரிஷ்வி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தது.
இந்த சந்திப்பில் சங்கத்தின் தலைவர் மோகனன் பெருமாளுடன் , செயலாளர் சாந்தா காளியப்பன், பொருளாளர் முனியாண்டி, முன்னாள் தலைவர் தலைவர் இராஜேந்திரன், துணைப் பொருளார் . மு. காசிவேல், செயலவை உறுப்பினர் மன்மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை மற்றும் மலேசிய தமிழ் இலக்கியம் தொடர்பாக கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வாய்ப்புக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார மற்றும் இலக்கியப் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் இந்த சந்திப்பு அமைந்தது.
அதே வேளையில் தமிழ் இலக்கியத்தை உலகளாவிய நிலையில் மேம்படுத்துவதற்கான தனது பணியை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடரும் என அதன் தலைவர் மோகனன் பெருமாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.