
வத்திகன் சிட்டி, மே-6, மறைந்த போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தமது பதவி காலத்தில் பயன்படுத்திய திறந்தவெளி வாகனம், போரினால் சீரழிந்த காசாவில் நடமாடும் கிளினிக்காக மாற்றப்படுகிறது.
அந்நோக்கத்திற்காக, தமது வாகனங்களில் ஒன்றை இறப்பதற்கு முன்பாகவே போப்பாண்டவர் காசாவுக்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தார்.
அவரின் விருப்பத்திற்கேற்ப, அவ்வாகனம் தற்போது ஜெருசலத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபை சமூகப் பணி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மனிதநேய உதவிகளுக்கான பாதைகளை இஸ்ரேல் திறந்த பிறகு, அவ்வாகனம் காசா சென்றடையுமென வத்திகன் சிட்டி கூறியது.
இந்த நடமாடும் கிளினிக்கில் மருத்துவ உபகரணங்களும், மருந்துகளை வைக்க குளிர்ப்பதனப் பெட்டியும் வைக்கப்படும்.
அதோடு ஒரு ஓட்டுநரும் மருத்துவக் குழுவினரும் இடம் பெற்றிருப்பர்.
தம்மைக் காணவும் வரவேற்கவும் சாலையோரங்களில் திரளும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்த்து கையசைக்க ஏதுவாக, போப்பாண்டவருக்காக அந்த திறந்தவெளி வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அவர் கடைசியாக 2014-ஆம் ஆண்டு பயன்படுத்திய அந்த Mitsubishi வாகனம், இத்தனை ஆண்டுகளாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
தற்போது கிளினிக்காகப் பயன்படுத்தப்படவிருப்பதால், மீண்டும் தூசு தட்டி புதுப்பிக்கப்படுகிறது