
கோலாலம்பூர், மார்ச்-5 – தைப்பூச காவடியாட்டத்தை கேலி செய்து தனியார் வானொலி வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், சமயங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதை அவசியமென, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM அறிக்கை வெளியிட்டுள்ளது.
மற்ற மதங்களை இழிவுப்படுத்தும் செயலானது இஸ்லாத்துக்கு எதிரானது என, JAKIM தலைமை இயக்குநர் Sirajuddin Suhaimee தெரிவித்தார்.
அதோடு மக்கள் மத்தியில் தேவையற்ற சச்சரவை ஏற்படுத்தும்.
பல்லினங்களையும் பல்வேறு சமய நம்பிக்கைகளையும் கொண்ட மலேசியாவில், மரியாதை, விட்டுக் கொடுக்கும் போக்கு, பரஸ்பர செழிப்பு முக்கியமென்றார் அவர்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட சமய சுதந்திரத்தை அனைவரும் மதிக்க வேண்டும்; பேச்சிலும் செயலிலும் இன்னொரு மதத்தின் நம்பிக்கைகளையும் பாரம்பரியத்தையும் இழிவுப்படுத்தக் கூடாது.
இஸ்லாம் ஒருபோதும் அப்படி சொல்லிக் கொடுத்ததில்லை என JAKIM-மின் அறிக்கையில் கூறப்பட்டது.
‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சைக்காக சம்பந்தப்பட்ட வானொலி அறிவிப்பாளர்கள் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், அவர்கள் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பக்கம் MCMC விசாரணையும் மறுபக்கம் போலீஸ் விசாரணையும் நடக்கிறது.