
புத்ராஜெயா, மார்ச்-6 – உள்ளுர் நடிகரும் மேடை நகைச்சுவையாளருமான ஹரித் இஸ்கண்டார் மற்றும் செசிலியா யாப் (Cecelia Yap) இருவருக்கும் மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC தலா 10,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னர் facebook-கில் இஸ்லாத்தை சிறுமைப்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதற்காக அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்களின் சர்ச்சைக்குரிய பதிவை, facebook-கின் தாய் நிறுவனமான Meta ஏற்கனவே நீக்கிவிட்டது.
இந்நிலையில் ஹரித் மற்றும் செசிலியாவின் facebook கணக்குகளை நிரந்தரமாக மூடுமாறு MCMC முன்வைத்துள்ள விண்ணப்பத்தை, Meta பரிசீலித்து வருவதாக, நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவ்வாணையம் கூறிற்று.
நாட்டில் சர்ச்சையான ‘ham’ சன்விட்ச் விவகாரம் குறித்து பேசி செசிலியாவும், ‘hamsap’ என்ற பெயரிலான ஒரு கிளாஸ் காப்பியின் புகைப்படத்தை பதிவேற்றி ஹரித்தும், முன்னதாக சர்ச்சையில் சிக்கினர்.
‘Ham’ என்ற சொல்லைப் பார்த்தாலே தனது சமய நம்பிக்கை ‘ஆட்டம் காண்பதாக’ ஹரித் சிலேடையாகக் கூறியிருந்தது, முஸ்லீம்கள் மத்தியில் பெரும் கண்டனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.