
கோலாலம்பூர், மார்ச்-6 – ஏரா வானொலியின் ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மதங்களுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்க அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஒன்றுபட்ட மலேசியர்களிடையே பிளவு வராதிருப்பது முக்கியம் என்ற கருத்தும் மேலோங்கும் நிலையில், குட்டையைக் குழப்பி நிலைமையை மோசமாக்க புதிதாக இறங்கியுள்ளார் இஸ்லாமிய மத போதகர் சா’ம்ரி வினோத்.
அதுவும், சுமூகமான முறையில் முடித்து வைக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான ஒரு விஷயத்தை அவர் மீண்டும் கிளறியிருப்பது வேதனையளிப்பதாக, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான MAHIMA-வின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் கூறியுள்ளார்.
ஏற்கனவே முஸ்லீம் அல்லாதோர் குறிப்பாக இந்துக்களை இழிவுப்படுத்தி பேசி வரும் சா’ம்ரி, தற்போது இந்த விஷயத்திலும் மூக்கை நுழைத்து குட்டையைக் குழப்புகிறார்.
சுபாங் ஜெயா, சீஃபீல்ட் ஆலயக் கலவரத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் Muhammad Adib Mohd Kassim-மின் குடும்பத்துக்கு, 2022-ல் அப்போதையப் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி 1.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கினார்.
உண்மையிலேயே Adib-புக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென விரும்பியிருந்தால் அப்போது ஏன் சா’ம்ரி வாய் மூடி மௌனியாக இருந்தார்?
இந்த இரண்டாடுகளிலும் அமைதியாக இருந்து விட்டு, திடீர் ஞானோதயம் வந்தது போல் Adib-ப்புக்கு நியாயம் கேட்கும் தோரணையில், அவர் இந்துக்களை சீண்டியுள்ளார்.
தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்கு தேன் கூட்டில் கை வைப்பதற்கு இவரைப் போன்ற சிலர் புறப்பட்டிருக்கின்றனர்.
இது அனுமதிக்கப்படக் கூடாது; நான் என் மக்களுக்காகவோ மதத்துக்காகவோ மட்டும் பேசவில்லை; அனைத்து மலேசியா மடானி மக்களுக்காகவும் பேசுகிறேன் என, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ சிவகுமார் கூறினார்.
வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் மலேசியர்கள் தங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பேண வேண்டும்; இது போன்ற புல்லுருவிகளின் செயலால் நாம் பிளவுப்படக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.
‘வேல் வேல்’ என இந்துக்கள் ஆடுவது பேயாட்டம் என்றும், மதுபோதையில் ஆடும் ஆட்டமென்றும் சா’ம்ரி வருணித்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.