
ஜோர்ஜ்டவுன், மார்ச்-9 – இவ்வாண்டு பினாங்குத் தைப்பூசத்தில் 224,775 ரிங்கிட் உண்டியல் பணம் வசூலாகியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
அவற்றில் தண்ணீர் மலை, கோயிலில் கிடைத்த உண்டியல் வசூல் 103,391 ரிங்கிட்டாகும்.
அதே சமயம், பக்தர்களின் தங்கக் காணிக்கை 33.81 கிராம் என, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஆணையரும், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினருமான ஏ. குமரேசன் கூறினார்.
தங்க இரத ஊர்வலத்தில் 121,384 ரிங்கிட் ரொக்கமும், 6.01 கிராம் தங்கக் காணிக்கையும் கிடைக்கப் பெற்றன.
இதில் வெளிநாட்டு நாணயங்களும் மற்ற பணப் பொருட்களும் சேர்க்கப்படவில்லை; மதிப்பைக் கணக்கிடுவதற்காக அவை வங்கிகளுக்கு அனுப்பப்படும் என்றார் அவர்.
நேற்று கொம்தாரில் நடைபெற்ற தைப்பூச உண்டியல் வசூல் எண்ணும் பணிகளுக்குப் பிறகு குமரேசன் அவ்விவரங்களை வழங்கினார்.
பக்தர்களின் நன்கொடைக்கு அறப்பணி வாரியம் சார்பில் அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
நேற்று காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த 59 தன்னார்வலர்கள் அதில் பங்கேற்றனர்.
இந்த உண்டியல் எண்ணும் பணிகளை, போலீஸ் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் அதிகாரிகளும் உடனிருந்து கண்காணித்தனர்.
இவ்வேளையில், உண்டியல் மற்றும் காணிக்கை வசூலை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் முக்கியமென, அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் Dr ஆர்.ஏ. லிங்கேஷ்வரன் கூறினார்.
இந்த நன்கொடைகள், ஆலய மேம்பாட்டுப் பணிகள், கல்வி வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் இதர அத்தியாவசிய முன்னெடுப்புகளுக்குப் பயன்படுத்தப்படுமென்றும் லிங்கேஷ் சொன்னார்.