
கோலாலம்பூர், மார்ச்-9 – இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை இழிவுப்படுத்தியச் செயல்கள் தொடர்பில், நாடு முழுவதும் 261 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் அதனை உறுதிப்படுத்தினார்.
அவற்றில் 150 புகார்கள் இஸ்லாமிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீதும், 73 புகார்கள் ஏரா எஃ.எம் வானொலி அறிவிப்பாளர்களின் ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சை தொடர்பிலும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 38 போலீஸ் புகார்கள், இரு வேறு விடியோக்களில் இஸ்லாத்தை அவமதித்த 2 நபர்களுக்கு எதிராக செய்யப்பட்டதாக IGP சொன்னார்.
ஆகக் கடைசியாக, சம்ரி வினோத் மீது ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் சர்ச்சையில், 2018-ல் சீஃபீல்ட் ஆலயக் கலவரத்தில் தீயணைப்பு வீரர் Adib Mohd Kassim உயிரிழந்தை சம்பவத்தை சம்ரி வினோத் தேவையில்லாமல் இழுத்து ஒப்பீடு செய்துள்ளதாக அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்ரி வினோத்தின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டு, விசாரணை அறிக்கையும் முழுமைப் பெறும் தருவாயில் உள்ளது.
முழுமைப் பெற்றதும் செவ்வாய்க்கிழமை வாக்கில் சட்டத் துறை அலுவலகத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என தான் ஸ்ரீ ரசாருடின் தெரிவித்தார்.
ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமைப் பெற்று கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வேளையில், இஸ்லாத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியிட்ட ஆடவர், ஆஸ்திரேலியா மெல்பர்னில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மேல் விவரங்களுக்காக போலீஸ் காத்திருக்கிறது.
அவரின் நடமாட்டம் குறித்த குடிநுழைவுத் துறையின் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என IGP சொன்னார்.