
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 18 – பினாங்கில் குடியிருப்புகளைக் கொண்ட அடுக்கு மாடி கட்டிடங்களின் உரிமையாளர்கள் விலங்குகளை தங்களது வளாகத்தில் வைத்திருப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
இது இதர குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு தொந்தரவு அல்லது ஆபத்தை ஏற்படுத்தலாம் என பினாங்கு மாநகர் மன்ற கட்டிட ஆணையர் நுருல் அஸிஸான் நோர்டின் ( Nurul Azian Noordin) தெரிவித்தார்.
குடியிருப்பு அடுக்கு மாடி கட்டிடங்களின் 14 (2) விதியின் கீழ் மற்றும் 3ஆவது அட்டவணை, அடுக்குமாடி குடியிருப்பு விதிமுறைகள் 2015 இன் அடிப்படையில் குடியிருப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டிடங்களில் இந்த தடை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
மேற்கூறிய சட்டத்தின் துணைப் பத்தி 14 (1)ஐ மீறும் உரிமையாளர், நிர்வாகக் கழகத்திடமிருந்து விலங்குகளை கட்டிடத்திலிருந்து அகற்றுவதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற மூன்று நாட்களுக்குள் அதைச் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் இருந்து விலங்குகளை அகற்றுவதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் பினாங்கு மாநகர் மன்றத்தின் நிர்வாகக் கழகம் எடுக்கலாம் என்று நுருல் அஸிஸான் நோர்டின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Tanjung Tokong , Jalan Fettes, Puncak Erskine 88 , அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் வீட்டு நாய்களின் தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து நேற்று அங்குள்ள குடியிருப்புவாசிகளில் சிலர் வெளியிட்ட அறிக்கை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
இதனிடையே செல்லப்பிராணிகள் தொடர்பான தொல்லை விவகாரங்கள் ஊராட்சி மன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதோடு செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் உரிமம் இல்லாமல் நாய்களை வளர்த்தால், ஊராட்சி மன்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று பினாங்கு கால்நடை சேவைகள் துறையின் இயக்குனர் டாக்டர் சைரா பானு முகமது ரெஜாப் ( Dr Saira Banu Mohamed Rejab )கூறினார்.