
கோலாலம்பூர், மார்ச்-27,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நல்லிணக்கத்தின் அடையாளமாக இன்று ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய நிர்வாகத்தினரைச் சந்தித்தார்.
Jakel குழுமத்துக்குச் சொந்தமான அந்நிலத்தில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் மடானி பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டியப் பிறகு, டத்தோ ஸ்ரீ அன்வார் அக்கோயிலுக்கு வருகை மேற்கொண்டார்.
அந்த குறுகிய நேர சந்திப்பில், ஆலய இடமாற்ற விவகாரத்திற்கு சுமூகத் தீர்வை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் கடப்பாட்டை பிரதமர் மறு உறுதிப்படுத்தியதாக, ஆலயத் தலைவர் கே.பார்திபன் கூறினார்.
“நாம் அனைவரும் ஒரே குடும்பமாக நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும்; இந்த அரசாங்கமும் அனைவரின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்” என அன்வார் குறிப்பிட்டதாக பார்திபன் தெரிவித்தார்.
அனைவருக்கும் தோதுவான வகையில் அவ்விவகாரம் தீர்வுக் காணப்பட்டிருப்பதற்கு நாங்களும் பிரதமருக்கு நன்றித் தெரிவித்தோமென, பார்திபன் குறிப்பிட்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
முன்னதாக, பிரதமர் வருவதை ஒட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
மடானி பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டிய போது உரையாற்றிய டத்தோ ஸ்ரீ அன்வார், கோயில் விஷயத்தில் அரசாங்கம் இறங்கி வந்ததாக சிலர் கூறுவதில் உண்மையில்லை என்றார்.
மாறாக, பல்லின – மத மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு சுமூகத் தீர்வை ஏற்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு; அதைத் தான் மடானி அரசு செய்ததாக விளக்கினார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நீடித்த நிலப் பிரச்னைக்கு நேற்று முன் தினம் இணக்கமானச் சூழலில் தீர்வுப் பிறந்தது.
50 மீட்டர் தொலைவில், அருகிலுள்ள இடத்திற்கு மாற ஆலய நிர்வாகம் ஒப்புக் கொண்டதே அதற்குக் காரணம்.
ஆலயம் இடமாறும் வரை, தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து செயல்பட்டு வருமென்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு ஆலய நிர்வாகத்திற்குத் தெரியாமல், DBKL-லிடமிருந்து அந்நிலத்தை Jakel குழுமம் வாங்கியதாக முன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.