
கேப் கெர்னிவல், ஏப் 2 – ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திங்களன்று பூமியின் துருவப் பகுதிகளுக்கு நேரடியாக முதல் மனித விண்வெளிப் பயணத்தை ஏவியது. நான்கு விண்வெளி வீரர்களை உள்ளடக்கிய, தனியார் நிதியுதவியுடன் கூடிய நான்கு நாள் பயணம் இதுவாகும்.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பயணங்களுக்காக 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்பெற்ற நோர்வே கப்பலின் நினைவாக ஃப்ராம்2 ( Fram2) என்று பெயரிடப்பட்ட இந்த பணி, விண்வெளியில் முதல் எக்ஸ்ரே எடுப்பது மற்றும் நுண் ஈர்ப்பு விசையில் காளான்களை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சோதனைகளைக் கொண்டிருக்கும்.
இந்த ஆராய்ச்சி செவ்வாய் கிரகத்திற்கு எதிர்கால நீண்ட கால விண்வெளி பயணத்தை ஆதரிக்கும் என்று நம்பப்படுகிறது. புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து திங்கள்கிழமை ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூலில் குழுவினர் ஏவப்பட்டனர்.
சக்திவாய்ந்த ராக்கெட் பூமியின் வட மற்றும் தென் துருவங்களை நோக்கி விண்கலம் தனது பயணத்தைத் தொடங்கியதும், கட்டுப்பாட்டு அறையில் உற்சாகக் கூச்சல்கள் எழுந்தன.
தொடக்க கால துருவ ஆய்வாளர்களைப் போலவே முன்னோடி மனப்பான்மையுடன், விண்வெளி ஆய்வின் நீண்டகால இலக்குகளை முன்னேற்றுவதற்காக புதிய தரவு மற்றும் அறிவை மீண்டும் கொண்டு வருவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என இந்த குழுவின் தலைவர்
சுன் வாங் ( Chun Wang) தெரிவித்தார்.
இந்த குழுவினர் பூமிக்குத் திரும்பியதும், கூடுதல் மருத்துவ உதவி இல்லாமல் விண்கலத்திலிருந்து வெளியேற முயற்சிப்பார்கள்.
விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு விண்வெளி வீரர்கள் அடிப்படைப் பணிகளை எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் ஆய்வின் ஒரு பகுதியாக அவர்களின் இந்த பயணம் அமைந்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் இன்றுவரை ஐந்து தனியார் விண்வெளி வீரர்களின் பயணங்களை மேற்கொண்டுள்ளது.