
கோலாலம்பூர், ஏப் 3 – ஆக்ரோஷமான அல்லது முரட்டுத்தனமான நாய் இனங்களை செல்லப்பிராணிகளாக அதன் உரிமையாளர்கள் வைத்திருப்பதைத் தடைசெய்ய புதிய வழிகாட்டுதல்களை கெடா அரசாங்கம் வரையவிருக்கிறது.
செவ்வாய்க்கிழமையன்று கோலா கெட்டில், தாமான் தேசா பிடாராவில் இரண்டு ராட்வீலர் ( Rottweiler ) நாய்கள் ஐந்து நபர்களை கடித்து குதறியதைத் தொடர்ந்து , மாநில வீட்டுவசதி, ஊராட்சி மன்றம் மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவரான கெடா ஆட்சிக் குழு உறுப்பினர் மன்சோர் ஷாக்கரியாவை ( Mansor Zakaria ) மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி வெளியிட்டது.
இத்தகைய ஆக்ரோஷமான இனங்களைக் கொண்ட நாய்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்றவை அல்ல. இத்தகைய நாய்கள் வெறித்தனமாக கடித்துக் குதறியிருப்பது இது இரண்டாவது சம்பவமாகும். இந்த முறை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் ஐவர் பாதிக்கப்பட்டதை கடுமையாக கருதுவதாக மன்சோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த இரண்டு ரோட்வீலர் நாய்களையும் கருணைக் கொலை செய்வதற்கு கால்நடை சேவைகள் துறையின் முடிவுக்கு அனுமதித்த அந்த நாய்களின் உரிமையாளரை தாம் சந்தித்ததாகவும் அவர் கூறினார். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட அனைவரையும் தாம் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களின் காயங்கள் மிகவும் கடுமையானவை என்பதோடு இச்சம்பவத்தினால் அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விவகாரத்திற்கு முறையாக தீர்வு காணப்படும் என பாதிக்கப்பட்டவர்கள் நம்புகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை தடுக்க வழிகாட்டுதல்கல்களை வரைவோம் என மன்சோர் கூறினார்.