
கோலாலம்பூர், ஏப் 15 – காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா எப்போதும் அமைதியை பின்பற்றும் நிலையான மனிதர் என்பதோடு ஒருபோதும் பழிவாங்காத அற்புதமான மனிதர் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அப்துல்லா வெறும் தலைவராக மட்டுமின்றி மலேசியாவின் அதிகார அரசியலில் ஒரு புதிய கதையை விதைத்த ஒரு சிறந்த ஆன்மா கொண்ட நபர் என தனது முகநூலில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் அன்வார் புகழாரம் சூட்டினார்.
துன் அப்துல்லாவுடனான தனது கடைசி சந்திப்பையும் அன்வார் நினைவு கூர்ந்தார். அரசியல் பாதையில் எதிரணியில் அவர் இருந்தாலும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். பாக் லா எப்போதும் அமைதியான நபராக இருந்தார்.
இஸ்லாம் ஹடாரி கோட்பாட்டின் மூலம் முன்னேற்றம் ,வளர்ச்சி மற்றும் மதிப்புகளுக்கு இடையே அவர் ஒரு பாலமாகவும் இருந்தார் என்பதை அரசாங்கத்திற்கு தலைமையேற்று நடத்தியபோது அவர் எடுத்த அணுகுமுறைகளில் இதனை காணமுடிந்ததையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
அவரது தலைமையின் கீழ், நீதித்துறையில் சீர்திருத்தம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவன அதிகாரமளித்தல் ஆகியவற்றை நாங்கள் கண்டோம். எல்லாவற்றையும்விட அப்துல்லாவின் தலைமைத்துவத்தில் அவரது மனிதாபிமானத்தையும் அன்வார் பாராட்டினார்.
அவர் கோபப்படாத முகத்துடன், அதிகாரத்தைப் பற்றிக்கொள்ளாத கைகளுடன், இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஒருபோதும் குரலை உயர்த்தாமல் நாட்டிற்கு தலைமை தாங்கினார்.
என் வாழ்க்கையில் ஒரு இருண்ட அத்தியாயத்தில் நான் போராடிக்கொண்டிருந்தபோது, அப்துல்லா ஒருபோதும் அவமானகரமான வார்த்தைகளால் என்னை காயப்படுத்தவில்லை. பழிவாங்குவது எளிதானது என்றாலும் எப்போதும் அமைதியைத் தேர்ந்தெடுத்த பாக் லாவின் ஆளுமை அப்படிப்பட்டது.
அப்துல்லாவின் குடும்பத்தினர் , துன் ஜீன் , அவரது மருமகன் கைரி ஜமாலுடின் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு எளிமையான அரசியல்வாதியின் இழப்புக்கு முழு தேசமும் கவலைப்படுகிறது என அன்வார் தனது இரங்கலில் பதிவிட்டுள்ளார்.