
கோலாலம்பூர், ஏப்ரல்-15, மலேசியர்களால் பாசமாக ‘பாக் லா’ என அழைக்கப்பட்ட நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி, தேசியப் பள்ளிவாசலில் உள்ள மாவீரர்கள் கல்லறையில் இன்று மீளாத் துயில் கொண்டார்.
முழு அரசு மரியாதையுடன் துன் அப்துல்லா பிற்பகல் 2.28 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக, முதன்மைத் தொழுகை மாடத்தில் அன்னாரது உடல் தொழுகைக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் நாட்டுத் தலைவர்கள், நெருங்கிய உறவினர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை பொது மக்கள் அஞ்சலி செலுத்தவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தோரில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்களான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃ குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இது தவிர, 4 முன்னாள் பிரதமர்களும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்; துன் அப்துல்லாவை துணைப் பிரதமராக்கி, பின்னர் அவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்து விட்டு ஒதுங்கியவரான, துன் Dr மகாதீர் முஹமட் அவர்களில் முக்கியமானவர்.
முறையே எட்டாவது ஒன்பதாவது பிரதமர்களாக இருந்த தான் ஸ்ரீ முஹிடின் யாசின், டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்போடு, காஜாங் சிறையிலிருக்கும் ஆறாவது பிரதமரான டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் சிறப்பு அனுமதிப் பெற்று அஞ்சலி செலுத்த வந்தார்.
‘பாக் லா’ பிரதமராக இருந்த ஆறாண்டுகளுக்கும் அவருக்குத் துணைப் பிரதமராக இருந்தவர் நஜீப் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரும் இன்னாள் மூத்த அமைச்சருமான லீ சியென் லூங்கும் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
அரசியலில் நண்பர் பகைவர் பாகுபாடின்றி அனைவராலும் மதிக்கப்பட்ட பண்பாளரான துன் அப்துல்லா, தனது 85-ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.