
புத்ராஜெயா, ஏப்ரல்-15, HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை செயலதிகாரியாகப் பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அப்பதவியிலிருந்து விலகியுள்ளார் ஷாகுல் ஹமீட் ஷேக் டாவூட்.
HRD Corp-பின் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட ஒரு பிரியாவிடை வீடியோவில், ஷாகுல் தனது பதவிக்காலம் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டதோடு, அனைத்து ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
“உங்களால்தான் நான் இங்கு நிற்கிறேன்; என்னை நீங்கள் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்; கூட்டாக நாம் கனவை நனவாக்கியுள்ளோம்” என ஊழியர்களுக்கு அவர் புகழாரம் சூட்டினார்.
ஷாகுலின் தலைமைத்துவத்தின் கீழ்தான், அந்த வேலை மற்றும் திறன் மேம்பாட்டு ஓரிய சேவை மையம் என்றுமில்லா உருமாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டது.
அக்கழகத்தை நவீனமயமாக்கியப் பெருமையும் அவரையே சாரும்.
மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டில் தாக்கத்தை தேசிய மற்றும் இவ்வட்டார அளவில் விரிவுப்படுத்துவதற்காக, HRD Corp அதன் வியூக திசையை மறுவடிவமைக்கவும் ஷாகுல் உதவியுள்ளார்.
2024-ஆம் ஆண்டில், அவர் HRD Corp-பை 434.2 மில்லியன் ரிங்கிட் என உயரிய வருவாய் ஈட்ட வழிவகுத்தார்; இதன் மூலம் 127 மில்லியன் ரிங்கிட்டை வரிக்கு முந்தைய இலாபமாகப் HRDCorp பதிவுச் செய்தது.
கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களும் 4 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்தன.
இலக்கிடப்பட்ட மற்றும் வியூக முதலீட்டு முயற்சிகளின் விளைவாக, 2024-ஆம் ஆண்டில் HRD Corp 5.3% வலுவான முதலீட்டு வருவாயைப் பெற்றது.
இதன் மூலம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 2.32 பில்லியன் வரி வசூலை அடைந்து சாதனைப் படைத்தது.
பதவிக் கடைசிக் காலத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC, HRD Corp மீதான விசாரணையைத் திறந்ததால், சற்று சறுக்கினாலும், இந்த 5 ஆண்டுகளில் பொதுவில் அவர் திறம்பட அக்கழகத்தை வழிநடத்தியுள்ளார்.
அந்த விசாரணைக் கூட, தேசியக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது; விசாரணைகளுக்கு வழிவிட்டு கடந்தாண்டு ஜூலையில் விடுமுறையில் சென்றவர், HRD Corp மீதான கறையை MACC போக்கியதும், இவ்வாண்டு மீண்டும் பணியைத் தொடர்ந்தார்.
இதனிடையே இந்த குறிப்பிடத்தக்க சாதனைகளால், ஷாகுல் HRD Corp பணியாளர்களின் நன்மதிப்பைப் பெற்று திகழ்வது குறிப்பிடத்தக்கது.