
சிங்கப்பூர், ஏப்ரல்-15, உடனடி பொதுத் தேர்தலுக்கு வழி விட ஏதுவாக சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசைத் தேர்ந்தெடுக்க மே 3-ஆம் அந்நாட்டு மக்கள் வாக்களிப்பர் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சிங்கப்பூர் பிரதமர் என்ற முறையில் லாரன்ஸ் வோங் சந்திக்கப் போகும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.
PAP எனப்படும் சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் தலைவர் பதவியை, நீண்ட கால பிரதமர் லீ சியென் லூங்கிடமிருந்து கடந்தாண்டு மே மாதம் லாரன்ஸ் வோங் பெற்றுக் கொண்டார்.
முந்தையத் தேர்தல்களைப் போலவே இம்முறையும் PAP-யே அதிகத் தொகுதிகளை வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அதன் வாக்கு வங்கி சற்று சரியலாமென பரவலாகக் கூறப்படுகிறது.
1965-ஆம் ஆண்டு முதல் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் PAP, அண்மைய சில பொதுத் தேர்தல்களில் எதிர்கட்சிகளிடம் அதிக தொகுதிகளை இழந்துள்ளது.
2020 பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகள் 10 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகளால் அந்த வணிக நாடு பாதிக்கப்படும் என்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
நேற்று கூட அக்குடியரசின் 2025 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பு, 1 முதல் 3 விழுக்காட்டிலிருந்து 0 முதல் 2 வரை என குறைக்கப்பட்டது.